Friday 14 September 2012

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க வரலாறு - 3

பகுதி:3
ங்கு ஒன்று 100 ரிங்கிட். முழுமையாகச் செலுத்த இயலாதவர்கள் மாதம் பத்து ரிங்கிட் செலுத்தி கூட்டுறவு சங்கத்தில் அங்கத்தினர் ஆகலாம். சாதாரணத் தோட்டத் தொழிலாளர்கள் பங்கு வாங்குவதற்கு இது எளிதாக இருந்தது. நாடு முழுவதும் அங்கத்தினர் சேர்த்து பங்குப் பணம் பெற்று துண்டாடல்களுக்குப் போகும் தோட்டங்களை வாங்குவதே கூட்டுறவு சங்கத்தின் முதல் குறிக்கோளாகும்.

 

19 பேர் கொண்ட குழுவுடன் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்ட இரண்டு வாரத்தில் 31.06.1960-இல் சங்கங்களின் பதிவிலாகாவில் பதிவு பெற்றவுடன் துன் வீ.தி.சம்பந்தன் அவர்களும் மற்றும் ம.இ.கா. தலைவர்களும் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு கூட்டுறவு சங்கத்திற்கு அங்கத்தினர்கள் சேர்க்கத் தொடங்கினர்.

புக்கிட் சீடிம் தோட்டத்தை பிரதமர் துங்கு திறந்து வைக்கிறார்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நாம் ஏழைதான். ஆனால், கோழைகள் இல்லை. மாதம் பத்து வெள்ளி கொடுத்து பங்கு வாங்குங்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்று துன் வீ.தி.சம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பிரசாரம், நாட்டில் உள்ள இந்தியர்களிடையே, குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.


நாட்டில் உள்ள ம.இ.கா. கிளைகளும் சில தேசியத் தோட்டத் தொழிற் சங்கக் கிளைகளும் கொடுத்த ஒத்துழைப்பின் பேரிலும், சமுதாய உணர்வுள்ள சில தோட்டக் குமஸ்தாக்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் ஆர்வத்தினாலும் உறுப்பினர்கள் அதிகமாகச் சேர்ந்தனர். இதனால், கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்ட ஆறே மாதங்களில் கெடா மாநிலத்தில் உள்ள புக்கிட் சீடிம் தோட்டத்தை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Thursday 13 September 2012

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க வரலாறு - 2

 
பகுதி:2
லேசிய இந்தியர் காங்கிரசின் தலைவராகவும் பொதுப்பணி - தபால் - தந்தி அமைச்சராகவும் இருந்த துன் வீ.தி.சம்பந்தன் அவர்களும், ம.இ.காவின் தலைவர்களும் இப்பிரச்னையைச் சமாளிக்க பலரோடு கலந்து ஆலோசிக்கலாயினர். கூட்டுறவு சங்கம் ஒன்றை அமைத்து துண்டாடல்களுக்குப் போகும் தோட்டங்களை வாங்கி ஏழைத் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலையும் இருப்பிடமும் வழங்க முயற்சிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.


1960-ஆம் ஆண்டு மே திங்கள் 14-ஆம் நாள் மாலை 7.30 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கூட்டுறவுக் கல்லூரியில் துன் வீ.தி. சம்பந்தன் அவர்கள் தலைமையில் கூட்டுறவு சங்க அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.


தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் லிமிடெட் என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்திற்கு துன் வீ.தி. சம்பந்தன் அவர்கள் தலைவராகவும், ம.இ.காவின் துணைத் தலைவரும், தொழிலாளர் அமைச்சருமான டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் துணைத் தலைவராகவும் அழைக்கப்பட்டனர்.

நெகாரா வங்கியில் இயக்குநராக இருந்த திரு.ஆர். கோவிந்தசாமி அவர்கள் இயக்குநர் வாரியத்தின் அக்ராசனராகவும், ம.இ.காவின் பொருளாளர் திரு.எஸ்.எஸ்.முருகேசு அவர்கள் இயக்குநர் வாரியத்தின் துணை அக்ராசனராகவும், கூட்டுறவு இலாகாவைச் சேர்ந்த திரு. எஸ்.டி.லிங்கம் அவர்கள் கௌரவச் செயலாளராகவும், திரு.வீ.ஜே.பாலசுந்தரம் அவர்கள் கௌரவப் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.


பேராக் மாநில ம.இ.கா. தலைவர் திரு.வீ.மீனாட்சிசுந்தரம், தோட்ட நிர்வாகி திரு.மாமன் ஜான், திரு.ஏ.பழனிச்சாமி, திரு.நைனா கவுண்டர், திரு.எஸ்.துர்கையா, திரு.கே.பணிக்கர், திரு.எஸ்.கைலாசம், மாண்புமிகு செனட்டர் டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன், செனட்டர் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா, திரு.ஐ.குருதயாள்சிங், திரு.என்.இராமநாதன் ஆகியோர் வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கணக்காய்வாளர்களாக திரு.பி.எல்.இட்சுமணனும், திரு.என்.எஸ்.மணியமும் நியமனம் செய்யப்பட்டனர்.


தேசிய நில நிதி கூட்டுறவு சங்க வரலாறு - 1


பகுதி:1

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன்விழா காணும் இந்த நாளில் அதன் வளர்ச்சியையும், சாதனைகளையும் தொடக்கத்தில் சந்தித்த சோதனைகளையும் எண்ணிப் பார்க்க விளைந்துள்ளது இப்பொன் விழா மலர்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்த கிழக்காசிய நாடுகளில் மலாயாவும் ஒன்று. விவசாயத்தை வியாபார சந்தையாக்கும் முயற்சியில் ஆங்கிலேயர்கள் மலாயாவில் கரும்பு, காப்பி பயிரிடத் தொடங்கினர். பின்னர் ரப்பர், தென்னை, செம்பனை என்று பெரிய அளவில் பயிரிடத் தொடங்கினர்.


ஆயிரமாயிரம் ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து குறைந்த விலையில் பெற்ற ஐரோப்பியர்கள் காடுகளை அழித்து பெரிய அளவில் விவசாயம் செய்ய தென்னிந்தியர்களை அழைத்து வந்தனர். குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளிகளாக அழைத்து வரப்பட்ட தென்னிந்திய மக்கள் தோட்டங்களையே தங்கள் சொந்த கிராமங்கள் போல் எண்ணி வாழத் தொடங்கினர்.

தென்னிந்தியர்கள் தோட்டத் தொழிலாளிகளாக அழைத்து வரப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பின்னர் மலாயா சுதந்திரம் பெற்றது. பெரிய பெரிய ரப்பர், தென்னை, செம்பனைத் தோட்டங்களை வைத்து இருந்த ஐரோப்பிய தோட்ட முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகு தோட்டங்களை விற்று விட்டுத் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.


தோட்டங்களைக் கூட்டு சேர்ந்து வாங்கிய தரகர்கள் துண்டு துண்டாகப் பிரித்து நல்ல இலாபத்திற்கு விற்றனர். அப்ப்டி விற்கப்பட்டத் தோட்டங்களை நம்பி இருந்த பல தென்னிந்தியத் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடு இழந்து போக்கிடம் தெரியாமல் குடும்பம் குடும்பமாகத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் நிர்பந்தத்திற்குள்ளாயினர். பல குடுமபங்கள் இந்தியாவிற்குத் திரும்பி விட்டனர்.


நாட்டை ஆண்டு வந்த கூட்டணி அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக இருந்த மலேசிய இந்தியர் காங்கிரசும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க தோட்டங்கள் துண்டாடப் படுவதை நிறுத்த பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டது ம.இ.கா. பொதுப் பேரவையிலும் இது பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.