Thursday 13 September 2012

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க வரலாறு - 1


பகுதி:1

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 50 ஆண்டுகள் நிறைவு பெற்று பொன்விழா காணும் இந்த நாளில் அதன் வளர்ச்சியையும், சாதனைகளையும் தொடக்கத்தில் சந்தித்த சோதனைகளையும் எண்ணிப் பார்க்க விளைந்துள்ளது இப்பொன் விழா மலர்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்த கிழக்காசிய நாடுகளில் மலாயாவும் ஒன்று. விவசாயத்தை வியாபார சந்தையாக்கும் முயற்சியில் ஆங்கிலேயர்கள் மலாயாவில் கரும்பு, காப்பி பயிரிடத் தொடங்கினர். பின்னர் ரப்பர், தென்னை, செம்பனை என்று பெரிய அளவில் பயிரிடத் தொடங்கினர்.


ஆயிரமாயிரம் ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து குறைந்த விலையில் பெற்ற ஐரோப்பியர்கள் காடுகளை அழித்து பெரிய அளவில் விவசாயம் செய்ய தென்னிந்தியர்களை அழைத்து வந்தனர். குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளிகளாக அழைத்து வரப்பட்ட தென்னிந்திய மக்கள் தோட்டங்களையே தங்கள் சொந்த கிராமங்கள் போல் எண்ணி வாழத் தொடங்கினர்.

தென்னிந்தியர்கள் தோட்டத் தொழிலாளிகளாக அழைத்து வரப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பின்னர் மலாயா சுதந்திரம் பெற்றது. பெரிய பெரிய ரப்பர், தென்னை, செம்பனைத் தோட்டங்களை வைத்து இருந்த ஐரோப்பிய தோட்ட முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகு தோட்டங்களை விற்று விட்டுத் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.


தோட்டங்களைக் கூட்டு சேர்ந்து வாங்கிய தரகர்கள் துண்டு துண்டாகப் பிரித்து நல்ல இலாபத்திற்கு விற்றனர். அப்ப்டி விற்கப்பட்டத் தோட்டங்களை நம்பி இருந்த பல தென்னிந்தியத் தொழிலாளர்கள் வேலை இழந்து வீடு இழந்து போக்கிடம் தெரியாமல் குடும்பம் குடும்பமாகத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் நிர்பந்தத்திற்குள்ளாயினர். பல குடுமபங்கள் இந்தியாவிற்குத் திரும்பி விட்டனர்.


நாட்டை ஆண்டு வந்த கூட்டணி அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக இருந்த மலேசிய இந்தியர் காங்கிரசும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க தோட்டங்கள் துண்டாடப் படுவதை நிறுத்த பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டது ம.இ.கா. பொதுப் பேரவையிலும் இது பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.

No comments:

Post a Comment